மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:06 PM IST (Updated: 8 Oct 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த விவசாயி, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

ஆரணி அருகே குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த விவசாயி, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டு பத்திரத்தை கொடுத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட வாரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 47), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (41). இவர்களுக்கு யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) ஆகிய 2 மகள்களும், கவுரிசங்கர் (6) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தியின் மாமனார் ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் கலைச்செல்வி, தனது கணவரிடம் சொல்லி, வீட்டு பத்திரத்தை தந்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். அவர் அதை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். நீண்ட நாட்களாகியும் ஏழுமலை அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு கொடுக்கவில்லை.

மனைவியை கொன்று விவசாயி தற்கொலை

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது குழந்தைகள் முன்னிலையிலேயே, மனைவி கலைச்செல்வியை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.

 கலைச்செல்வி இறந்ததும், மூர்த்தி வீட்டின் அருகில் தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story