ஆயுத பூஜையையொட்டி 800 சிறப்பு பஸ்கள்
ஆயுத பூஜையையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 800 சிறப்பு பஸ்கள் வருகிற 12, 13-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.
விழுப்புரம்,
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமையும்), விஜயதசமி 15-ந் தேதி (வெள்ளிக்கிழமையும்) கொண்டாடப்பட உள்ளது. இதனால் 14, 15-ந் தேதிகள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாக இருப்பதால் வெளியூர் செல்வோர் அதிகம் இருப்பார்கள். மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா 15-ந் தேதி நடக்க உள்ளதால் தென்மாவட்ட மக்கள், அதிகளவில் சொந்த ஊருக்கு செல்லக்கூடும்.
இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வோர்களின் வசதிக்காக வருகிற 12, 13-ந் தேதிகளில் (செவ்வாய், புதன்) அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
800 சிறப்பு பஸ்கள்
அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில், வந்தவாசி, சேத்பட், போளூர் ஆகிய இடங்களுக்கும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சித்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும், கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி- கிடக்கு கடற்கரை சாலை), திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், திருச்சி, சேலம், கும்பகோணம் (வழி- விழுப்புரம்) ஆகிய இடங்களுக்கும் வருகிற 12-ந் தேதியன்று 200 சிறப்பு பஸ்களும், 13-ந் தேதியன்று 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் அனைவரும், பஸ் பயணத்தின்போது முககவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஜோசப் டயாஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story