நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க வந்த பள்ளி மாணவர்கள்
புதூர் செக்கடிவரை வரும் அரசு பஸ்சை புளியம்பட்டி வரை நீட்டிப்பு செய்யக் கோரி மனு அளித்து நடவடிக்கை இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மீண்டும் மனு அளிக்க வந்தனர்.
திருவண்ணாமலை
புதூர் செக்கடிவரை வரும் அரசு பஸ்சை புளியம்பட்டி வரை நீட்டிப்பு செய்யக் கோரி மனு அளித்து நடவடிக்கை இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மீண்டும் மனு அளிக்க வந்தனர்.
பள்ளி மாணவ- மாணவிகள்
தண்டராம்பட்டு தாலுகா புதூர்செக்கடி மதுரா புளியம்பட்டி கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தானிப்பாடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
அவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு போக்குவரத்து வசதி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.50 கொடுத்து மாணவ, மாணவிகள் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்களிடம் போலீசார் சமூக இடைவெளியின்றி ஆட்டோவில் செல்ல கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் புளியம்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள புதூர் செக்கடி கிராமத்திற்கு தினமும் காலை, மாலை என இரு வேளையும் அரசு பஸ் வந்து செல்கிறது.
புதூர் செக்கடி கிராமத்தில் இருந்து புளியம்பட்டி கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவு தான் உள்ளது.
மீண்டும் வந்தனர்
அதனால் புதூர்செக்கடி கிராமத்திற்கு வரும் அரசு பஸ்சை பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புளியம்பட்டி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை மனு அளித்து ஒருவாரமாகியும் நடவடிக்கை இல்லாததால் மீண்டும் மனு அளிக்க புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அப்போது மாணவர்கள் கூறுகையில், தினமும் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இருட்டி விடுகிறது. இதனால் எங்களின் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
அதனால் புதூர்செக்கடி வரை வரும் அரசு பஸ்சை புளியம்பட்டி வரை நீட்டிப்பு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
பின்னர் போலீசார் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் புளியம்பட்டிக்கு அரசு பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story