போதமலை வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பெட்டிகளை தலைச்சுமையாக எடுத்து சென்ற ஊழியர்கள்-8 கி.மீ. தூரம் நடந்தே சென்றனர்
போதமலை வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பெட்டிகளை 8 கிலோ மீட்டர் தூரம் ஊழியர்கள் தலைச்சுமையாக எடுத்து சென்றனர்.
ராசிபுரம்:
ஊரக உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி உள்பட மொத்தம் 25 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 பதவிகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 15 பதவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 25 ஆயிரத்து 294 ஆண் வாக்காளர்களும், 26 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 51 ஆயிரத்து 479 பேர் வாக்களிக்க உள்ளனர்.
போதமலை
இதற்காக வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராசிபுரம் அருகே தரை மட்டத்திலிருந்து 8 கிலோ மீட்டர் உயரத்திலுள்ள போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை ஆகிய பகுதிகளில் 3 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,222 வாக்காளர்கள் உள்ளனர்.
போதமலைக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் வாகனங்களில் அங்கு செல்ல முடியாத காரணத்தால், தேர்தலின் போது ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தலைச்சுமையாகவே எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன
அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி போதமலையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள், வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சானிடைசர் போன்ற கொரோனா தடுப்பு உபகரணங்கள் நேற்று தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களால் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன.
கீழூர் மற்றும் மேலூர் வாக்குச்சாவடிகளுக்கு ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமத்திலிருந்து மண்டல தேர்தல் அலுவலர் பழனிசாமி தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினரும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வாக்குச்சாவடிக்கு மண்டல தேர்தல் அலுவலர் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினரும் பொருட்களை தலைச்சுமையாக கொண்டு சென்றனர். இவர்களுடன் சுகாதாரத்துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசாரும் உடன் சென்றனர்.
கரடு முரடான பாதை
அவர்கள் கரடு முரடான பாதை வழியாக தட்டுத்தடுமாறியபடி 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை நடந்தே எடுத்து சென்றனர். சில மணி நேரங்களுக்கு பிறகு வாக்குச்சாவடிகளை அடைந்த ஊழியர்கள் அங்கு ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கினர்.
Related Tags :
Next Story