ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடக்கிறது: வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு
எருமப்பட்டி அருகே அ.வாழவந்தி மற்றும் செவிந்திப்பட்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
வாக்குச்சாவடிகள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி உள்பட 15 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக 25 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதில் 2 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 8 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வானதால், 15 பதவிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு 63 பேர் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக வெண்ணந்தூர் வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலுக்காக 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 11 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 24 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 603 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே தேர்தலையொட்டி எருமப்பட்டி அருகே அ.வாழவந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் செவிந்திப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தயார் நிலையில் இருந்த வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வாக்குச்சீட்டுகள் மற்றும் பெட்டிகளை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த வாக்காளர் பட்டியலை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து முறைகேடுகள் நடக்காமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story