25 பதவிகளுக்கு 162 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25 பதவி இடங்களுக்கு 162 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25 பதவி இடங்களுக்கு 162 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
25 பதவி இடங்கள்
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 54 பதவி இடங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. இதில் 29 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஒரு மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 3 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள், 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 17 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு 91 பேர் போட்டியிடுகின்றனர். இதில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிடத்திற்கு 6 பேரும், 3 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 17 பேரும், 4 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிஇடங்களுக்கு 15 பேரும், 17 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 53 பேரும் ஆக மொத்தம் 91 பேர் போட்டியிடுகின்றனர்.
டோக்கன்
இதற்கான வாக்குப்பதிவு இன்று மாவட்டம் முழுவதும் 162 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. இதில் 132 வாக்குச்சாவடிகள் சாத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாபாதிப்படைந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
கண்காணிப்பு
மாவட்டம் முழுவதும் 34 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள்என கண்டறியப்பட்டு 17 வாக்குச்சாவடி மையங்கள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 17 வாக்குச்சாவடி மையங்கள் நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு பதிவிற்கான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி காலை 8 மணி அளவில் 9 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story