பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை பையில் வைத்து கடத்திச்சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை பையில் வைத்து கடத்திச்சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் குழந்தை பிறந்தது
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 24). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(22). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜலட்சுமி கர்ப்பம் அடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 5-ந் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது.
உதவுவது போல நடித்த பெண்
இந்த நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் மாடிப்பகுதியில் உள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி உள்ளார். மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் எனக் கூறி உதவி செய்வதுபோல் நடித்துள்ளார்.
அந்த பெண் கூறியதை உண்மை என நம்பிய ராஜலட்சுமியும் அவரிடம் சகஜமாக பேசி உள்ளார். மேலும் கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவதுபோல் நடித்து அவருடனேயே அந்த பெண் இருந்துள்ளார்.
குழந்தையை கடத்தி சென்றார்
நேற்று காலை அந்தப் பெண் ராஜலட்சுமியிடம், "நீங்கள் குளித்து விட்டு வாருங்கள். நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் கூறி விட்டு குளிப்பதற்காக சென்றார். அந்த நேரத்தில் ராஜலட்சுமியின் கணவர் கடைக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், குழந்தையை தான் வைத்திருந்த கட்டைப்பையில் வைத்து கடத்திக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார்.
உதவி செய்த பெண்ணும் மாயமானார்
இதற்கிடையே, குளிக்க சென்றுவிட்டு வார்டுக்கு திரும்பி வந்த ராஜலட்சுமி தனது குழந்தையைக் காணாதது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்ற பெண்ணை தேடிப்பார்த்தார்.
அந்த பெண்ணையும் காணாததால் பதறியடித்துக் கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் குழந்தையையும், அந்த பெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அந்த பெண் தனக்கு உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்தி சென்றது அவருக்கு தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடனடியாக தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தனர். யாருக்கும் குழந்தையின் நிலை தெரியவில்லை.
இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்ட வார்டில் இருந்து அந்தப் பெண் கட்டைப்பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குழந்தையை கடத்தி சென்ற அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story