கனமழையால் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது
காரைக்குடி
காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது.
பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மானாமதுரை, சிங்கம்புணரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வானம் மந்தமான நிலையில் காணப்பட்டது. இதனால் பகலில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் காரைக்குடி சுற்று வட்டார பகுதியாக உள்ள கோட்டையூர், சாக்கோட்டை, பள்ளத்தூர், பாதரக்குடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதியிலும் இந்த மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் இரவு முழுவதும் குளுமையான நிலை நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விவசாய பணிகள் தீவிரம்
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இங்குள்ள ஊருணிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பல்வேறு பகுதியில் உள்ள கிராமப்புறத்தில் உள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தொடர் மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விவசாய பணிகளுக்காக உழவு செய்யும் பணியும், நெல் விதைப்பு பணியும், சில இடங்களில் நெல் நடவு பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் தொடர் மழை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story