வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை


வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Oct 2021 8:46 PM GMT (Updated: 8 Oct 2021 8:46 PM GMT)

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியில் 6-வது வார்டுக்கும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் 7-வது வார்டுக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சியில் 4-வது வார்டுக்கும் உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சி தற்செயல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். 7-வது வார்டில் 213 ஆண் வாக்காளர்கள், 210 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 423 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும், வாக்காளர்களில் சிலர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறி வாக்காளர் அடையாள அட்டையுடன் நேற்று 7-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையமான வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்களின் சிலரது பெயர் நீக்கப்பட்டு விட்டதாகவும், வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு சிலரது பெயர் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை என்றும், வேறு வார்டில் உள்ளவர்களின் பெயர்கள் 7-வது வார்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி நியாயமான முறையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story