இடி, மின்னலுடன் பலத்த மழை
ஜெயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம், உடையார்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், உட்கிராமங்களிலும் நேற்று மழை பெய்தது. காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பெய்த மழையானது, மாலை நேரத்தில் லேசாகவும், மிதமாகவும் பெய்தது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் 1 மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. இதனால் அதிகளவில் மழைநீர் சாலையில் தேங்கியது. மேலும் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதேபோல் தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. இரவு 7 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. இதேபோல் ஆண்டிமடம் வட்டாரத்தில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து, வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதரையன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story