உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு; இன்று நடக்கிறது


உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு; இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 9 Oct 2021 2:16 AM IST (Updated: 9 Oct 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

பெரம்பலூர்:

இன்று வாக்குப்பதிவு
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், காலியாக உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளான அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டு, திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டு, கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு, செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய் ஊராட்சி 9-வது வார்டு, சிறுகடம்பூர் ஊராட்சி 3-வது வார்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ.தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டு, ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு, இலையூர் ஊராட்சி 9-வது வார்டு, தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டு ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
25 வாக்குச்சாவடிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்செயல் தேர்தலுக்கு வாக்களிக்க 3 வாக்குச்சாவடி மையங்களும், அரியலூர் மாவட்டத்தில் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு 22 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்படுத்தப்பட்டது. தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நேற்று காலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அரசு அலுவலர்களால் வழங்கப்பட்டது. மாலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் பூத் சிலிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட மத்திய-மாநில அரசுகளின் ஆவணங்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று வாக்களிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 88 பேரும் ஈடுபடவுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசாா் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 20-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story