கடலூர் தி.மு.க. எம்.பி. மீது கொலை வழக்குப்பதிவு


கடலூர் தி.மு.க. எம்.பி. மீது கொலை வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 2:24 AM IST (Updated: 9 Oct 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

முந்திரி தொழிலாளி மர்ம மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர், 

கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு(வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை 

இதற்கிடையில் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தன. 
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் பண்ருட்டி மற்றும் பணிக்கன்குப்பத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். 
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நந்தகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அடித்துக் கொலை 

இதற்கிடையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். 

கடலூர் எம்.பி. மீது வழக்குப்பதிவு 

அதாவது கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதில் டி.ஆர்.வி.ரமேஷ் எம்.பியை தவிர்த்து மற்ற 5 பேரையும் நேற்று காலை பிடித்து கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு 5 பேரிடமும் நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.  மேலும் இந்த வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story