கடலூரில் மின்னல் தாக்கி முருகன் கோவில் கோபுரம் சேதம்


கடலூரில் மின்னல் தாக்கி முருகன் கோவில் கோபுரம் சேதம்
x
தினத்தந்தி 9 Oct 2021 2:27 AM IST (Updated: 9 Oct 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் முருகன் கோவில் கோபுரம் சேதமடைந்ததோடு, மொம்மைகளும் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் 2 நாட்களாக மழை இல்லை. கடலூரில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. அதாவது கடலூரில் 92.12 டிகிரி வெயில் பதிவானது.
இதற்கிடையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

இடி, மின்னலுடன் மழை

அதன்படி கடலூரில் மாலை 4.15 மணி அளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழை இரவு 10 மணியை தாண்டியும் பெய்த வண்ணம் இருந்தது.
இதேபோல் நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் 1 மணி நேரத்தை தாண்டியும் மின்சாரம் வரவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு மின் வினியோகம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

கோவில் கோபுரம் சேதம் 

கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள முருகன்  சன்னதி கோபுரத்தை இரவு 9 மணி அளவில் மின்னல் தாக்கியது. இதில் கோவில் கோபுரம் சேதடைந்தது. அதுமட்டுமின்றி கோபுரத்தில் இருந்த பொம்மைகள் உடைந்து கீழே விழுந்தன. 
மேலும் அந்த சமயத்தில் கோவிலில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள்  அதிர்ச்சி அடைந்து, கதறினர். உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் பக்தர்கள் கோவிலில் இருந்து பாதுகாப்புடன் வெளியேறினர். இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு 9 மணி அளவில் ராஜகோபுரம் நோக்கி வந்த மின்னல் திடீரென முருகன் சன்னதி மேல் கோபுரத்தை தாக்கி விட்டது. பக்தர்களை முருகன் தான் காப்பாற்றினார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story