தினத்தந்தி புகார் பெட்டி -வீணாகும் குடிநீர்


தினத்தந்தி புகார் பெட்டி -வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 9 Oct 2021 2:28 AM IST (Updated: 9 Oct 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி -வீணாகும் குடிநீர்

திருவட்டார் காங்கரையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு பொதுக்குழாய் உள்ளது. அந்த குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் குழாயில் உள்ள நல்லி உடைந்து விட்டது. இதனால் தண்ணீர் வரும்போதெல்லாம், தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே இதை தடுக்க நல்லி அமைத்து தர வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
-ரவீந்திரகுமார், திருவட்டார்.

தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாய நகர் ஊராட்சி கிறிஸ்துநகரில் உள்ள தெற்கு தெருவில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் மழை பெய்தால் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நின்று கொசு உற்பத்தியாகும் இடமாக மாறுகிறது. எனவே அங்கு கழிவுநீர் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.வெற்றிவேந்தன், வெள்ளமடம்.
தெரு விளக்கு எரியவில்லை
நாகர்கோவில் வட்டவிளை பலவேசகாரசாமி கோவில் தெருவில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் வாகனத்தில் செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசங்கர், வட்டவிளை.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
தக்கலை அருகில் வள்ளியாறு உள்ளது. இந்த ஆற்றின் கரை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமித்து வைத்து இருப்பவர்களிடம் இருந்து ஆற்றை மீட்டு, கரையை பலப்படுத்தி, ஆற்று நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
-கோலப்பன். கொல்லன்விளை.
சாலை
நாகர்கோவில், ஒழுகினசேரியில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ், லாரிகள் போக்குவரத்து எப்போதும் இருக்கும். மேலும் சாலை சேதம் அடைந்த நிலையில்  இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
வடிகால் அமைக்கப்படுமா
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு தேரிவிளை பகுதியில் மழை காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் வற்றுவதற்கு குறைந்தது 10 நாட்கள் வரை ஆகிவிடும். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க வேண்டும்.
-லீபன், வடக்கு தேரிவிளை. 

Next Story