நெல்லை-தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு


நெல்லை-தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 3:19 AM IST (Updated: 9 Oct 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
2-ம் கட்ட தேர்தல் 
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. அன்று நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை ஆகிய 5 ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடந்தது. 
இந்த நிலையில், மீதமுள்ள 9 ஒன்றியங்களில் இன்று (சனிக்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 722 ஆண்கள், 1 லட்சத்து 65 ஆயிரத்து 91 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேர் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 826 வாக்காளர்கள் ஓட்டு போடுகின்றனர். 
4,516 வாக்குப்பதிவு அலுவலர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 516 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் வீடியோ பதிவு குழுவும் நியமிக்கப்பட்டு இருக்கிறது. 
தேர்தல் பணியில் மொத்தம் 4,516 வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் நேற்று அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி, அடையாள அட்டை, பணி ஆணை ஆகியவை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்குப்பெட்டிகள்         அனுப்பி வைப்பு
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பி வைக்கும் பணியும் நேற்று நடந்தது. மண்டல வாரியாக அந்தந்த அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களும் வாகனங்களில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்த வாகனங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பெட்டிகள், தேர்தல் ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவு பணிக்காக வந்திருந்த அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாக்குச்சாவடிகள் தயார் 
அங்கு அவர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு தேவையான மேஜைகள், ஓட்டு யாருக்கு போடுகிறோம் என்பதை பிறர் பார்க்க முடியாதபடி தடுப்பு அட்டைகள் அமைப்பது உள்ளிட்டவற்றை தயார் செய்தனர். மேலும் வாக்குச்சாவடியின் வெளிப்பகுதியில் தேர்தல் தொடர்பான விவரங்களையும் வாக்காளர்களுக்கு தெரியும்படி ஒட்டினார்கள். நேற்று இரவே வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்த தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 630 ஆண்கள், 3 லட்சத்து 84 ஆயிரத்து 722 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 52 ஆயிரத்து 390 வாக்காளர்கள் ஓட்டு போடுகின்றனர். 
இந்த தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 842 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக 574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ள 137 வாக்குச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
2,300 போலீசார் பாதுகாப்பு
தேர்தல் பணியில் 5 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இங்கும் வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story