மாவட்டத்தில் நாளை மெகா முகாம்: 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு கலெக்டர் விஷ்ணு பேட்டி
1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடக்கிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
மெகா தடுப்பூசி முகாம்
இதுகுறித்து அவர் நெல்லையில் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை 4 முறை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று உள்ளது. தற்போது 5-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இந்த முகாம் 750 இடங்களில் நடக்கிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
1 லட்சம் பேருக்கு இலக்கு
மாவட்டத்தில் மொத்தம் 69.1 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகராட்சி போன்று கிராமங்களிலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெறும். 12 மணிக்கு பிறகு அனைத்து முகாம்களிலும் உள்ளவர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவார்கள்.
இந்த முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 76 ஆயிரத்து 16 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு தகவல் அனுப்பி உள்ளோம். போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது.
இந்த மாத இறுதிக்குள் 85 சதவீதம் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன மக்களுக்கு 99 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளோம் 2-வது தவணை தடுப்பூசி அங்குள்ள முகாமில் போடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கூடுதலாக பறக்கும் படை
நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் எப்படி அமைதியாகவும், நேர்மையானகவும் நடந்ததோ, அதுபோல் ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தலும் நடந்துள்ளது. 2-வது கட்ட தேர்தலும் அதேபோல் நடைபெறும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story