தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x
தினத்தந்தி 8 Oct 2021 10:08 PM GMT (Updated: 8 Oct 2021 10:08 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


சுகாதார சீர்கேடு 

கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை பைபாஸ் சாலை பிரியும் இடத்தில் திருவண்ணாமலை கூட்ரோடு மேம்பாலம் உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சென்றாலே மூக்கை பிடித்துக்ெகாண்டு செல்ல வேண்டிய உள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷாஜகான், பெரியமாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணகிரி.
------------
குரங்குகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம், கூட்டமாக வரும் குரங்குகள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்த குரங்குகள் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே சுற்றி திரிகின்றன. இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்யமூர்த்தி, எம்.சி.பள்ளி, கிருஷ்ணகிரி

குண்டும், குழியுமான சாலை 

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை 10-வது வார்டு மோகன் காலனியில் 4-வது குறுக்கு தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அங்கு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், பழையபேட்டை, கிருஷ்ணகிரி.

சேலம் அம்மாபேட்டை மெயின் ரோடு முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலை சேதமடைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சிவகுமார்,அம்மாபேட்டை, சேலம்.


திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி

சேலம் அன்னதானபட்டி 53-வது வார்டு தார்பாய்காடு தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி மூடி இல்லாமல் திறந்தபடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாகவே காட்சி அளிக்கிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் விரைவில் அந்த பாதாள சாக்கடையை சரி செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-க.மணிகண்டன், அன்னதானபட்டி, சேலம்.

மின்விளக்கு எரியவில்லை

தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் ரெயில்வேகேட் பாலம் அருகில் மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பாலம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. ஆனால் மின்விளக்குகள் ஒரு மாதம்கூட எரியவில்லை. ஒன்று அல்லது இரண்டு மின்விளக்குகள் மட்டுமே எரிகின்றன. அதுவும் சில நேரங்களில் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியை இரவு நேரங்களில் கடந்து செல்லவே பயமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

-திவ்யா, கடகத்தூர், தர்மபுரி.

நாய்கள் தொல்லை 

சேலம் அம்மாபேட்டை பகுதியில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகம் உள்ளது. நஞ்சம்பட்டி ரவுண்டானா முதல் காந்தி மைதானம் மார்க்கெட் வரை பார்க்கும் இடமெல்லாம் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன. இரவு நேரங்களில் வேலை முடித்து செல்பவரை துரத்தி துரத்தி கடிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-முருகானந்தம், அம்மாபேட்டை, சேலம்.

குப்பைதொட்டி வேண்டும்

சேலம் அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி பகுதியில் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த வழியாகத்தான் ஊருக்குள் செல்லவேண்டும். அந்த பகுதி முழுவதும் குப்பை குவியலாகவே மாறி உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அந்த வழியை கடந்து செல்லவே சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ளவும், குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மு.கோபிநாத், நஞ்சம்பட்டி, சேலம்.

சுத்தம் செய்யப்படாத கழிப்பிடம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் பொதுகழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆறுமுகம், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

ஒருவாரமாக திறக்கப்படாத ரேஷன்கடை 

நாமக்கல் மாவட்டம் மணியனூர் ஊராட்சி நல்லூர் ரேஷன் கடையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தவரை நிறுத்தி விட்டனர். நல்லூரில் மட்டும் சுமார் 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக இந்த ரேஷன் கடை திறக்கப்படவில்லை. இதனால் ரேஷன்கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரேஷன்கடையை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், நல்லூர், நாமக்கல்.

Next Story