செங்கோட்டையில் தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


செங்கோட்டையில் தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 3:49 AM IST (Updated: 9 Oct 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை:
செங்கோட்டையில் தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தாயாரிடம் தகராறு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை கே.சி. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 70). இவர்களுடைய மகன் மாரியப்பன் (44).
இவர் கடந்த 9.6.2020 அன்று வீட்டில் இருந்த தாயார் இசக்கியம்மாளிடம் பீடி தொழிலாளருக்கான ஓய்வூதியத்தை தருமாறும், இடத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும் கூறி தகராறு செய்தார்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த மாரியப்பன், பெற்ற தாய் என்றும் பார்க்காமல் இசக்கியம்மாளை கம்பால் அடித்தும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த மாரியப்பன் தன்னுடைய அண்ணன் பெரியசாமியிடம், தாயார் கொலை செய்யப்பட்டது குறித்து வெளியே கூறினால், உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், தாயை கொலை செய்த மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Next Story