தரமணியில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது


தரமணியில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2021 8:44 AM IST (Updated: 9 Oct 2021 8:44 AM IST)
t-max-icont-min-icon

தரமணியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை ஒட்டியம்பாக்கம் அரசன் கழனி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 49). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4-ந்தேதி செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் சிகரெட் பிடித்துள்ளார். இதை பார்த்த டிரைவர் குமார் கண்டித்து உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் டிரைவர் குமாரை அவதூறாக பேசிவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின்தொடர்ந்து வந்து தரமணி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, இருவரும் டிரைவர் குமாரை தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.

இதுகுறித்து குமார் தரமணி போலீசில் புகார் செய்தார். தரமணி போலீஸ் உதவி கமிஷனர் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த பரத்ராஜ் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story