ஊத்துக்கோட்டையில் தற்காலிக சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
ஊத்துக்கோட்டையில் தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் அருகே வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
பாலப்பணிகள் நடைபெறும் இடதுபுறத்தில் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டது.
இதன் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவு பெறவில்லை. ஆமை வேகத்தில் பாலப்பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் நந்தனம் காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து பாய்ந்து வந்த தண்ணீரால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திருவள்ளூரில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செம்மண் சாலையில் சிக்கிக்கொண்டது.
இதனால் நேற்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லாரி சிக்கிக்கொண்ட பகுதியில் தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மாற்று வழியில் வாகனங்கள் சென்று வருகின்றன.
Related Tags :
Next Story