திண்டுக்கல் மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தாத 28 ஆயிரம் பேர்


திண்டுக்கல் மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தாத 28 ஆயிரம் பேர்
x
தினத்தந்தி 9 Oct 2021 7:39 PM IST (Updated: 9 Oct 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டும் திண்டுக்கல் மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தாமல் 28 ஆயிரம் பேர் அலட்சியமாக உள்ளனர்.

திண்டுக்கல்:

கொரோனா தடுப்பூசி
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்ட மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 32 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 32 ஆயிரத்து 117 பேர் குணமடைந்து இருக்கின்றனர். 

அதேநேரம் சிறுமி, வாலிபர், முதியவர்கள் என இதுவரை 639 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. அதிலும் 2-வது அலையில் உயிரிழப்பு அதிகம் ஆகும்.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 18 வயது நிரம்பியவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 11 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கிறது. 

இதன்மூலம் கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி மற்றும் 18 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் 

அதேநேரம் 5 லட்சத்து 94 ஆயிரம் பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர். இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் மட்டும் தடுப்பூசி செலுத்தாமல் 28 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதேநேரம் கொரோனாவின் 2 அலைகளின் போதும் திண்டுக்கல்லில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்பும் ஏற்பட்டது. எனினும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் பலர் அலட்சியமாக இருப்பதாக சுகாதாரத்துறையினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் சுமார் 2½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இதனால் திண்டுக்கல் மாநகராட்சி, மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதியாக இருக்கிறது. 

எனவே கொரோனா பரவலை தடுக்க 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது அவசியம். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,059 இடங்களில் முகாம் நடக்கிறது. அதில் திண்டுக்கல்லில் மட்டும் 100 முகாம் நடக்கிறது.

இந்த முகாமுக்கு மக்களை வரவழைக்கும் வகையில் 50 ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதனை கமிஷனர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

மேலும் கொரோனா தொற்றில் இருந்து உயிரை காக்க இன்று நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story