ரூ.25 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே, குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னாளப்பட்டி:
புகையிலை பொருட்கள்
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், ஏ.வெள்ளோடு காபிகடை பிரிவு அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 10 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து காரை ஓட்டி வந்த பள்ளப்பட்டியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 30) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.
குடோனில் பதுக்கல்
விசாரணையில் அவர், திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி அருகே காட்டுப் பகுதியில் உள்ள குடோனில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
மேலும் அந்த புகையிலை பொருட்களை திண்டுக்கல் பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு செல்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து ஞானசேகரனிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், சிறுநாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் உள்ள குடோனில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த குடோனில் 33 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்து 1,000 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் என்று கருதப்படுகிறது.
கைது-வலைவீச்சு
இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த குடோன் உரிமையாளர் முகமது ஜக்கரியா மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story