இசைக்கருவிகளை வாசித்தபடி கலைஞர்கள் திடீர் போராட்டம்


இசைக்கருவிகளை வாசித்தபடி கலைஞர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2021 7:49 PM IST (Updated: 9 Oct 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் தலைமை அலுவலகம் முன்பு இசைக்கருவிகளை வாசித்தப்படி கலைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:

பழனி முருகன் கோவிலில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்டவற்றை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் அதிகாரி ஒருவர் இசைக்கலைஞர்களை நாளை முதல் (அதாவது இன்று) பணிக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

 இதையடுத்து இசைக்கலைஞர்கள் நேற்று மாலை அடிவாரத்தில் உள்ள பழனி முருகன் கோவில் தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக்கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு இசைக்கலைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறுகையில், பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என 7 கோவில்களில் 19 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். திடீரென எங்களை பணிக்கு வரவேண்டாம் என கூறுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இசைக்கலைஞர்களின் திடீர் போராட்டத்தால், பழனியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story