வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்பு துறை


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்பு துறை
x
தினத்தந்தி 9 Oct 2021 8:22 PM IST (Updated: 9 Oct 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள  தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது.

அபாயகரமான இடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 6 தாலுகாக்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு பணியில் ஈடுபடுவதோடு, பேரிடர் ஏற்பட்டால் தகவல் அளிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு கருவிகள், சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு கூறியதாவது:- 
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 60 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

தயார் நிலையில்...

தீயணைப்பு துறை டி.ஜி.பி. உத்தரவின்படி வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். 3 ரப்பர் படகுகள், 6 எமர்ஜென்சி லைட், ஜெனரேட்டர், பெட்ரோல் மூலம் இயங்கும் 23 மரம் அறுக்கும் எந்திரங்கள், 100 உயிர் பாதுகாப்பு கவசங்கள், கயிறு போன்றவை உள்ளது. 9 தீயணைப்பு வாகனங்கள், 5 பெரிய தண்ணீர் லாரிகள் உள்ளன.

குன்னூரில் அதிகம் பெய்யும்

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊட்டியில் 44 மரங்கள், கூடலூரில் 26 மரங்கள், குன்னூரில் 30 மரங்கள், கோத்தகிரியில் 22 மரங்கள் என மொத்தம் 122 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். 

வடகிழக்கு பருவமழை குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக பெய்யும். தேவைப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் உடனிருந்தார்.


Next Story