கீழணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீா் வரத்து
வீராணம் ஏரியின் நீா்மட்டம் 46 அடியை எட்டியது
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும், இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காக, ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசாி அனுப்பப்படுவதாலும், கீழணையில் இருந்து குறைந்தளவு தண்ணீர் வந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கீழணை மற்றும் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது. மேலும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் ஏாிக்கு மழைநீா் வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து நேற்று மாலை நிலவரப்படி 46 அடியை எட்டியது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓாிரு நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story