தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டி.எம்.பி. காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் (வயது 45) என்பவர் கடந்த மாதம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி திம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் ஆறுமுகம் (31), சொர்ணராஜ் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த நிர்மல்குமார் (38) என்பவர், 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதேபோல் கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டம் அங்கமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்குமார் (42) என்பவர் 4½ வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆறுமுகம், சொர்ணராஜ், நிர்மல்குமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story