விழுப்புரம் மாவட்டத்தில் 85.34 சதவீத வாக்குகள் பதிவு


விழுப்புரம் மாவட்டத்தில் 85.34 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:02 PM IST (Updated: 9 Oct 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 85.34 சதவீத வாக்குகள் பதிவானது.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந் தேதியன்று முடிவடைந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த 6 ஒன்றியங்களையும் உள்ளடக்கிய 12 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 82 பேரும், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 625 பேரும், 316 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 1,239 பேரும், 2,337 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 7,009 பேரும் ஆக மொத்தம் 2,800 பதவியிடங்களுக்கு 8,955 பேர் களத்தில் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது.
இந்த 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 8 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 49 பேரும், 88 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 337 பேரும், 180 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 605 பேரும், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 4,019 பேரும் ஆக மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கான தேர்தலில் 5,010 பேர் களத்தில் போட்டியில் இருந்தனர்.

4,384 பதவியிடங்களுக்கு

இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 501 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 16 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 87 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 228 பேர் வாக்களிக்கும் வகையில் 1,379 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 724 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 45 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 101 போ் என மொத்தம் 4 லட்சத்து 90 ஆயிரத்து 95 பேர் வாக்களிக்கும் வகையில் 950 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரை 2-ம் கட்ட தேர்தல் 4,384 பதவியிடங்களுக்கு நடைபெற்றது. 

வாக்குப்பதிவு

இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வந்த பொதுமக்களை அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் உடல்வெப்ப நிலையை பரிசோதித்தனர். முக்கியமாக முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து வராதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வைத்து ஒவ்வொருவருக்கும் கையுறை வழங்கப்பட்டது. அந்த கையுறையை அணிந்துகொண்டு வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றினர்.

18 வயது பூர்த்தியடைந்த இளம் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து முதல் வாக்கினை மகிழ்ச்சியோடு பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பலர் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர்.

டோக்கன்

ஒரே நேரத்தில் 4 பதவிகளுக்கான தேர்தல் நடந்ததால் ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்கை செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஆரம்பத்தில் இருந்தே விறு விறுப்பாக நடைபெற்றது. ஒரு சில கிராமப்புறங்களில் மழைபெய்ததால் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. 

பொது வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அவகாசத்தின்படி மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. கடைசி ஒரு மணி நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் பொது வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 
இத்தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் 11,450 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,591 பேரும் ஈடுபட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தேர்தல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெறுவது வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டது.

வாக்குப்பெட்டிகளுக்கு சீல்

தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகளுக்கு தேர்தல் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற ஏதுவாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் ஆகியோர் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 5,200-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

85.34 சதவீத வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 85.34 சதவீத வாக்குகள் பதிவானது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Next Story