விக்கிரவாண்டி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர் திடீர் சாவு


விக்கிரவாண்டி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர் திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:07 PM IST (Updated: 9 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர் திடீரென இறந்தார்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் ஒன்றியம் வீடூர் ஊராட்சியில் வாக்குச்சாவடி எண் 232-ல் வாக்குச்சாவடி அலுவலர் நிலை-1 பணியில் ஈடுபடுவதற்காக, விழுப்புரம் வழுதரெட்டி விவேகானந்தா நகரை சேர்ந்தவரும், விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான மாணிக்கவாசகம்(வயது 55) என்பவர் நியமிக்கப்பட்டார். இவா் நேற்று முன்தினம் மாலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்து தோ்தல் பணி மேற்கொண்டிருந்தார். 

மயங்கி விழுந்து சாவு

நள்ளிரவு 1 மணியளவில் மாணிக்கவாசகத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, இருக்கையில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக அலுவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் மாணிக்கவாசகத்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணிக்கவாசகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  

இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கவாசகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து இறந்த மாணிக்கவாசகத்திற்கு பதிலாக மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த ஆசிரியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story