வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:08 PM IST (Updated: 9 Oct 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து. வேலூர் ஒன்றியம் சேக்கனூரில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து. வேலூர் ஒன்றியம் சேக்கனூரில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2-ம் கட்ட தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

3 ஊராட்சி ஒன்றியங்களில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 23 பேரும், 50 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 152 பேரும், 87 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 273 பேரும், 697 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,812 பேரும் என்று மொத்தம் 839 பதவிகளுக்கு 2,260 பேர் போட்டியிட்டனர். 

நீண்ட வரிசை

3 ஊராட்சி ஒன்றியங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் வாக்களிக்க 469 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 95 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணிக்கு பின்னர் அதிக அளவு வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரத்தொடங்கினர். வேலூரை அடுத்த சாத்துமதுரை, ஊசூர் அரசுப்பள்ளி உள்ளிட்டவற்றில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் 41.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

3 மணிக்கு பின்னர் சிறிதளவு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெண்கள் அதிகளவு வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்ததை காண முடிந்தது. 
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்...

வேலூர் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் காலை 7 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அதனால் வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் உள்ள வேட்பாளர்களின் பெயர், சின்னத்தை பார்த்து தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதையடுத்து மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 

பதற்றமான 95 வாக்குச்சாவடிகள் உள்பட 469 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, அவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

ஐ.ஜி. ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமாரவேல்பாண்டியன் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் போலீசார், ஊர்க்காவல்படையினர் என்று 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூரை அடுத்த ஊசூர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.

தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
வேலூர் ஊராட்சி ஒன்றியம் சேக்கனூரில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே வாக்கு சேகரித்ததாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானம் செய்தனர். அதையடுத்து அந்த வாக்குச்சாவடியின் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதேபோன்று வேலூரை அடுத்த சதுப்பேரியில் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்காளர்களுக்கு வேட்டி-சேலை வழங்குவதாக அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

அணைக்கட்டு

அணைக்கட்டு ஒன்றியத்தில் 249 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்தனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு கேட்டதால் மற்ற கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மலை கிராமங்களான பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பாலாம் பட்டு ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரே நேரத்தில் 400-கும் மேற்பட்டோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இதனால் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7.30 மணிவரை வாக்களித்தனர். 

Next Story