தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி


தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 9 Oct 2021 11:28 PM IST (Updated: 9 Oct 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. வ.உ.சி. கல்லூரி சார்பில் நடந்த இந்த போட்டியை கனிமொழி எம்.பி. மற்றும் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில், வ.உ.சி. பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக மாணவ-மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினர். இதில், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.  வ.உ.சி. கல்லூரியில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய அவர்கள், பாளையங்கோட்டை ரோடு, வ.உ.சி. சாலை, பழைய துறைமுகம், சார்ஜ் ரோடு, தலைமை தபால்நிலையம், தெற்கு காவல் நிலையம் வழியாக 9 கிலோமீட்டர் தூரம் ஓடி மீண்டும் வ.உ.சி. கல்லூரியை அடைந்தனர்.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நெல்லை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி மாணவர் பசுபதி முதல் இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2-ம் இடத்தையும், நெல்லை சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் நவீன் பிரபு 3-ம் இடத்தையும் பிடித்தனர். அதுபோல் பெண்கள் பிரிவில் தென்காசி மாவட்டம் வெங்கடேஸ்வராபுரம் கிராம கமிட்டி பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதல் இடத்தையும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2-ம் இடத்தையும், நாகலாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா 3-ம் இடத்தையும் பிடித்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் கனிமொழி எம்.பி. மினி மாரத்தான் போட்டியில் காலில் ஷூ அணியாமல் ஓடிய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 14 மாணவ-மாணவிகளை கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு ஷூ வாங்கி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் சிவசங்கரன், கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி பேராசிரியர் சிவஞானம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story