ஒரே குடும்பத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தனர்-முழு உடல் கவச உடை அணிந்து வந்தனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தனர்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சேகர் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி உரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு காலை முதலே வாக்காளரகள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இதனிடையே மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கோப்பணம்பாளையம் ஊராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 6 பேர் வாக்களிக்க ஆம்புலன்சு மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் முககவசம், கையுறை மற்றும் முழு உடல் கவச உடை அணிந்து வாக்களித்தனர். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களும் முழு உடல் கவச உடை அணிந்திருந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் ஜனநாயக கடமையை ஆற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வாக்களிக்க வந்தது தேர்தல் பிரிவு அதிகாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story