மோகனூர் பகுதியில் பலத்த மழை: ராசிபாளையத்தில் வீடு இடிந்து விழுந்தது-தொழிலாளி குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


மோகனூர் பகுதியில் பலத்த மழை: ராசிபாளையத்தில் வீடு இடிந்து விழுந்தது-தொழிலாளி குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 9 Oct 2021 11:34 PM IST (Updated: 9 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை காரணமாக ராசிபாளையத்தில் வீடு இடிந்து விழுந்தது. இதனிடையே வீட்டில் இருந்த தொழிலாளி குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மோகனூர்:
பலத்த மழை
நாமக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி, தாழ்வான பகுதிகளில் தஞ்சம் அடைந்தது.
ராசிபாளையம் ஊராட்சி காட்டுப்பிள்ளையார் கோவில் அருகே வசித்து வருபவர் பரமசிவம். தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் மனைவி பேபி மற்றும் குழந்தைகள் தியாஸ்ரீ, ரித்திக் ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். இதனிடையே அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக அவரது ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக தப்பினர்
சத்தம் கேட்டு பரமசிவம், மனைவி, குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். சரியான நேரத்துக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. 
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மழைக்கு இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு, பரமசிவத்துக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கினர். மேலும் மளிகை சாமான்கள், உடைகள் வழங்கப்பட்டன. இதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் நிதி வழங்கினார்.
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
எருமப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி கலர்மேடு பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். 
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.

Next Story