கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்காக மனைவியை கொன்றேன். ஓட்டுனர் பயிற்சிபள்ளி நிர்வாகி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்காக, மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தஞ்சையில் கைதான வாகன ஓட்டுனர்பயிற்சி பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்காக, மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தஞ்சையில் கைதான வாகன ஓட்டுனர்பயிற்சி பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
எரித்துக்கொலை
திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது 30). திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி திவ்யா (24). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ (3) என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி திவ்யாவுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் மயக்கமடைந்ததும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்தார்.
தஞ்சாவூரில் பிடிபட்டார்
பின்னர் சத்தியமூர்த்தி அங்கிருந்து குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். அப்போது சத்தியமூர்த்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தபோது பயன்படுத்திய காரை ரூ2½ லட்சத்திற்கு விற்று விட்டு, வேறு ஒரு காரில் சென்னைக்கு சென்று போரூர் அருகே அந்த காரை நிறுத்திவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்துவந்த அர்ச்சனா (23) என்பவருடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.
கடந்த 15 நாட்களாக சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, ஊட்டி என பல்வேறு இடங்களில் சத்தியமூர்த்தியை தனிப்படை போலீசார் தேடிவந்தநிலையில், அவர் தனது கள்ளக்காதலி அர்ச்சனாவுடன் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தஞ்சாவூர் சென்று சத்தியமூர்த்தியை பிடித்தனர். பின்னர் சத்தியமூர்த்தி, அவருடைய கள்ளக்காதலி அர்ச்சனா மற்றும் குழந்தை ஆகியோரை கந்திலிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சத்தியமூர்த்தி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
கள்ளக்காதலியை திருமணம் செய்ய...
ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வந்த போது திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் திவ்யாவின் மாமா மகளான திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சந்திரன் மகள் அர்ச்சனாவுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்தபோது அவருடனும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எனக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் திவ்யா தனது தாய்வீட்டில் இருந்து வந்தார். திவ்யா இருந்தால் அர்ச்சனாவை திருமணம் செய்ய விடமாட்டார் என்று முடிவு செய்து திவ்யாவை அவருடைய தாய் வீட்டிலிருந்து அழைத்து வந்து தூக்க மருந்து கொடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தேன்.
பின்னர் சென்னைக்கு சென்று அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு பஸ் மூலம் தஞ்சாவூர் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தேன்.
இவ்வாறு சத்தியமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுநீரகம் பழுதடைந்ததாக நாடகம்
சத்தியமூர்த்தி தனக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டதாகவும், அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும், எங்களை யாரும் தேட வேண்டாம் என செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நாடகமாடி சென்றது தெரியவந்துள்ளது.
கள்ளக்காதலிக்காக மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவரே எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story