190 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 190 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 190 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
8-ம் வகுப்பு வரை...
கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன. இதற்கிடையே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனையின்படி தமிழக அரசு வருகிற 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளும்படியும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய, மாவட்ட அளவிலான ஆய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
190 பள்ளி வாகனங்கள் ஆய்வு
அப்போது வாகனங்களின் தரம் மற்றும் சான்றுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா?, குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லப்படும் அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என்பது குறித்து வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ், தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் ஆய்வு குழுவை சேர்ந்த அதிகாரிகள் பலர் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் 57 பள்ளிகளை சேர்ந்த 190 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 50 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 140 வாகனங்களில் சிறு, சிறு குறைகள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு, அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. முன்னதாக தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் பஸ்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதனை கையாளும் முறை குறித்து விளக்கமளித்தனர். இதுபோல் அதிகாரிகளும் பள்ளி வாகன டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
Related Tags :
Next Story