கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காதல் தம்பதி
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 24), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(22). இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜலட்சுமி கர்ப்பம் அடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 5-ந் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது.
உதவுவது போல நடித்த பெண்
இந்த நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியின் மாடிப்பகுதியில் உள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி உள்ளார்.
நேற்று முன்தினம் காலையில் அந்த பெண், தான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன். நீ குளித்து விட்டு வா என்று ராஜலட்சுமியிடம் கூறி உள்ளார். அதை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி அந்த பெண்ணிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு குளிப்பதற்காக சென்று விட்டார்.
குழந்தையை கட்டைப்பையில் கடத்தி சென்றார்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் குழந்தையை ஒரு கட்டைப்பையில் வைத்து எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தி சென்றார்.
நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் குளித்து விட்டு வார்டுக்கு திரும்பி வந்த ராஜலட்சுமி தனது குழந்தையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் உடன் இருந்த பெண் தனது குழந்தையை கடத்தி சென்ற விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து ராஜலட்சுமி தனது கணவரிடம் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக இதுகுறித்து தஞ்சை நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
3 தனிப்படைகள் அமைப்பு
விசாரணையில், ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்த பெண் ஆட்டோவில் புதிய பஸ் நிலையம் சென்றது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் டேவிட் உட்ரோ பிராங்க்ளின், ரவிமதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
குழந்தை மீட்பு; பெண் கைது
இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கடத்திய பெண் பட்டுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படையினர் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்தியதாக பாலமுருகன் மனைவி விஜி(37) என்பவரை கைது செய்தனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
குழந்தையை மீட்ட தனிப்படை போலீசார், பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இருந்த ராஜலட்சுமியிடம் குழந்தையை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஒப்படைத்தார்.
குழந்தையை பார்த்ததும் ராஜலட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்தார். அவரது கண்ணில் இருந்து பொல, பொலவென்று ஆனந்த கண்ணீர் துளிகள் வெளியானது. தனது குழந்தையை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார். பின்னர் ராஜலட்சுமியும், குணசேகரனும் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
30 மணி நேரத்தில் மீட்பு
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கூறுகையில், குழந்தை கடத்தப்பட்ட 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உள்ளது. இதில் தனிப்படையினர் திறமையாக செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story