மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் பலி


மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 10 Oct 2021 3:11 AM IST (Updated: 10 Oct 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் உயிரிழந்தனர்.

கீழப்பழுவூர்:

தந்தை- மகன்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 47). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள வயலில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகன் சங்கர்(18). இவர் கீழப்பழுவூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
தினமும் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து முத்துசாமி வீட்டிற்கு திரும்பும்போது, சங்கரையும் சைக்கிளில் அழைத்து செல்வது வழக்கம்.
சாவு
இதேபோல் நேற்று முன்தினம் இரவும் மகனை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாதை சேறும், சகதியுமாக இருந்ததால் சங்கர் சைக்கிளில் முன்னே சென்றார். பின்னால் முத்துசாமி நடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர்களுடைய வீட்டிற்கு அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை அறியாமல் கம்பியை மிதித்த சங்கர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அபயக்குரல் எழுப்பினார். பின்னால் வந்த முத்துசாமி அதிர்ச்சி அடைந்து, மகனை காப்பாற்ற நினைத்து அருகே கிடந்த ஈர குச்சியால் மின்கம்பியை அகற்ற முயன்றுள்ளார். அது ஈரக்குச்சி என்பதால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்த பின்னர், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அறுந்து கிடந்த மின்கம்பியை நேற்று ஊழியர்கள் சரி செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story