ரூ.2.40 கோடி தங்கம் கடத்தல்; 18 பேர் கைது


ரூ.2.40 கோடி தங்கம் கடத்தல்; 18 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 3:23 AM IST (Updated: 10 Oct 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த 18 பேர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

18 பேரிடம் சோதனை

  பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம், விலையுர்ந்த பொருட்கள் சிக்குவது இந்த விமான நிலையத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.

  இந்த நிலையில் துபாய், சார்ஜாவில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு 2 விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்த பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமானங்களில் வந்த பயணிகளை, அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது 18 பேரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் 18 பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

ரூ.2.40 கோடி தங்கம் சிக்கியது

  அவர்களின் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களிடம் இருந்து தங்கம் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் 18 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை 18 பேரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் 18 பேருக்கும் இனிமா கொடுத்து அதிகாரிகள் தங்கத்தை வெளியே எடுத்தனர். அந்த தங்கம் 5 கிலோ இருந்தது. அதன் மதிப்பு ரூ.2.40 கோடி ஆகும்.

  18 பேரும் துபாய், சார்ஜாவில் இருந்து மாத்திரை வடிவில் வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தியதும் தெரியவந்தது. பின்னர் 18 பேரையும் பிடித்து விமான நிலைய போலீசாரிடம், அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 18 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. ஆனால் 18 பேரின் பெயர், விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. 18 பேரையும் கைது செய்த விமான நிலைய போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story