சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தியிருந்த காரை திருடிய என்ஜினீயர் கைது
சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தியிருந்த காரை திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுத்தியிருந்த காரை திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர்
நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் உசேன் அகமது (வயது 31), கார் டிரைவர். இவருடைய உறவினரின் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக உசேன் அகமது கடந்த 5-ந் தேதி நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு காரில் வந்தார்.
பின்னர் அவர் காரை சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய மார்க்கெட் செல்லும் பாதையில் ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அவர் குழந்தையை பார்க்க சென்றார். மேலும் அவர் ஆஸ்பத்திரியிலேயே 2 நாட்கள் இருந்தார். இதனிடையே 8-ந் தேதி அவர் காரை எடுப்பதற்காக நிறுத்தப்பட்ட இடத்துக்கு வந்தார். அப்போது அங்கு கார் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கார் திருட்டு
பின்னர் கார் திருட்டு போனது குறித்து உசேன் அகமது செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கந்தம்பட்டி பகுதியில் மீட்பு வாகனம் ஒன்று உசேன் அகமதுவின் காரை தூக்கி கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரின் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த ரெக்கவரி வேனை நிறுத்தினர். பின்னர் ரெக்கவரி வேனின் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மீட்பு வாகனம் டிரைவர், கார் பழுதாகி விட்டதால் எடுத்து செல்ல வேண்டும் என்று அந்த நபர் கூறியதின் அடிப்படையில் கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடன் இருந்த நபரிடம் விசாரித்த போது, கார் பழுதாகி விட்டது என பொய் கூறி அதை திருடி செல்வது தெரியவந்தது.
ரூ.60 ஆயிரம் சம்பளம்
இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர், சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு (28) என்பதும், என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அங்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், எதற்காக காரை திருடினார்? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story