தினத்தந்தி புகார்பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஜல்லி கற்கள் நிறைந்த சாலை
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா, சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம் கிராமம், அக்கரைப்பட்டி காட்டுவளவில் இருந்து வெ.மேட்டுப்பாளையம் செல்லும் தார்சாலை, ஜல்லி கற்கள் நிறைந்த சாலையாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.பிரதாபன், அக்கரைப்பட்டி, சேலம்.
அடிப்படை வசதிகள் இல்லை
சேலம் மாவட்டம் மணியனூர் 50-வது வார்டு எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் தினமும் அள்ளப்படாத குப்பைகள், தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகள், பயன் இல்லாத குடிநீர்த்தொட்டி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், எஸ்.ஆர்.எம். தோட்டம், சேலம்.
பராமரிப்பு இல்லாத சாக்கடை கால்வாய்
சேலம் தாதகாப்பட்டி கேட் மேற்கு தெருவில் சாக்கடை கால்வாய் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீருடன், மழைநீரும் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. இதனால் சாலை முழுவதும் கழிவுநீராக காட்சி அளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தாதகாப்பட்டி, சேலம்.
ஆபத்தான மின்கம்பம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா செல்லியம்பட்டி ஊராட்சி, புலிகரை துணை மின்நிலையத்தின் கீழ் வரும் கடுக்காப்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பம் எந்தநேரம் வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் வீடுகள் அதிகம் இருப்பதால் மின்கம்பம் சாய்ந்து ஏதாவது வீட்டின் மீது விழுந்தால் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பாக இந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கடுக்காப்பட்டி, தர்மபுரி.
சேலம் கோரிமேடு உயிரியல் பூங்கா சாலை அருகில் சந்தோஷ்நகர் ஓடை ஓரம் அமைந்துள்ள மின்கம்பம் சாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த மின்கம்பம் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கோரிமேடு, சேலம்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தர்மபுரி மாவட்டம் குண்டலஹள்ளி கிராமத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தால் மழைநீர் தெருக்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல முறை வடிகால் அமைத்து தர வேண்டி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மழைநீர் தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், குண்டலஹள்ளி, தர்மபுரி.
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 2-வது வார்டு காந்திநகர் முக்கிய சாலையில் ஆயிரக்கணக்கானோர் செல்லும் பாதையில் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி தொடங்கியது. தற்போது அந்த பணி பாதியில் நிற்கிறது. இதுபற்றி அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை. அந்த பணியை தொடர அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதியில் நிற்கும் இந்த சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், காந்திநகர், சேலம்.
கதவு இல்லாத கழிப்பிடம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பேரூராட்சி வண்டிகாரன்காடு பகுதியில் பொதுகழிப்பிட கட்டிடத்தில் 2 அறைகளில் கதவு உடைந்தும், உட்புறம் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியவில்லை. மேலும் கதவு இல்லாததால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன. எனவே பேரூராட்சி நிர்வாகம் அவற்றை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-ஜி.கோபி, பிள்ளாநல்லூர், நாமக்கல்.
நாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில் புதுப்பேட்டை, பழையபேட்டை, லண்டன்பேட்டை, ஜக்கப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம், கூட்டமாக வரக்கூடிய நாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சாலைகளில் செல்லும் பலரும் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அத்திக், புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி.
மோசமான சாலை
கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலைகள் பல இடங்களில் பழுதடைந்துள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய அண்ணா நினைவு வளைவு அருகில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story