மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு


மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு
x
தினத்தந்தி 10 Oct 2021 11:20 AM IST (Updated: 10 Oct 2021 11:20 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் மீனவர் சம்பத். இவர் சக மீனவர்களான நாகூரான், சுமன், சுந்தர் ஆகிய 3 பேருடன் சேர்ந்து நேற்று மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். கரை பகுதியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடிக்கும்போது மீனவர் சம்பத் என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு படகில் மயங்கி விழுந்தார். உடனே உடன் சென்ற சக மீனவர்கள் அவரை கரைப்பகுதிக்கு கொண்டு வருவதற்குள் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். உடலை படகு மூலம் கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் இதுகுறித்து மாமல்லபுரம் போலீசாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாமல்லபுரம் போலீசார் அங்கு சென்று கடலில் இறந்த மீனவர் சம்பத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் சம்பத் உயிரிழந்த சம்பவம் புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மீனவர் சம்பத் இறந்த தகவல் பற்றி அறிந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துக்கம் அனுசரித்தனர்.

Next Story