குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராதிருவிழாவில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராதிருவிழாவில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனால் 2-ம் திருநாளில் மட்டும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் சென்று காப்பு வாங்கி கைகளில் கட்டி வேடம் அணிந்தனர். தசரா குழுவினரும் மொத்தமாக காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்த பக்தர்களுக்கு வழங்கினர்.
பின்னர் 3 முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 5-ம் திருநாளான நேற்று இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.
4 நாட்களுக்கு அனுமதி
6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திருநாளான 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
10 முதல் 12-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.
Related Tags :
Next Story