வருசநாடு அருகே உழவு பணிகளை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் மலைக்கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


வருசநாடு அருகே உழவு பணிகளை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்  மலைக்கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:25 PM IST (Updated: 10 Oct 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே உழவு பணிகளை தடுத்து நிறுத்திய வனத்துறையினரை கண்டித்து மலைக்கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வருசநாடு அருகே அரசரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களை வெளியேற்ற மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இந்த உத்தரவை தொடர்ந்து மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது. எனவே இந்த தடையை நீக்க கோரி மலைக்கிராம  மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. 
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று பொம்மராஜபுரம், வெள்ளிமலை உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் அரசரடி கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அரசரடி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் மாடுகளை வைத்து உழவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த வருசநாடு வனத்துறையினர் உழவு பணிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பொதுமக்கள் வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரை விளை நிலங்களுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து உழவு பணியில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
பின்னர் மலைக்கிராம மக்கள், வனத்துறையை கண்டித்து அரசரடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாடும்பாறை போலீசார் அரசரடி கிராமத்திற்கு விரைந்து சென்று மலைக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மலைக்கிராம மக்கள், கடந்த 6 மாதங்களாக விவசாயத்தில் ஈடுபடாததால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உணவுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட்டு வன ஆக்கிரமிப்பாளர்களை மட்டுமே வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். 
இதற்கிடையே அரசரடி கிராமத்திற்கு வருசநாடு வனச்சரகர் ஆறுமுகம் வந்தார். அவர் உழவு செய்யப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஐகோர்ட்டு உத்தரவின்படி பொதுமக்கள் அத்துமீறி விளை நிலங்களில் உழவு பணியில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் வனச்சரகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசரடியை போல மற்ற மலைக்கிராமங்களிலும் விளை நிலங்களில் உழவு பணியில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. 
இதனிடையே மலைக்கிராம மக்கள் விவசாய பணியில் தொடர்ந்து ஈடுபட போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து மேகமலை, வருசநாடு வனத்துறையினர் அரசரடி கிராமத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story