ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம்
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஊட்டி எச்.பி.எப். பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் ஊட்டியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
உடல் கூறியல் பிரிவு, உடலியல் பிரிவு, நூலகப் பிரிவு, நோயியல் பிரிவு கட்டப்படுகிறது. அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் போன்ற சிறப்பு சிகிச்சை மையங்கள் இடம்பெறுகிறது. மேலும் முதல்வர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, மாணவ-மாணவிகள் விடுதி போன்ற குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பணி சற்று தாமதமாக நடந்து வருகிறது. நடப்பாண்டில் 150 மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஊட்டியில் ரூ.141.30 கோடி மதிப்பில் கல்லூரி வளாக கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இதுவரை 30 சதவீதம் முடிந்து இருக்கிறது. மருத்துவமனை வளாக கட்டிடம் ரூ.130.27 கோடி செலவில் 8 பிரிவுகளாக நடந்து வருகிறது. இந்த பணியும் 30சதவீதம் நடந்து முடிந்து உள்ளது. ரூ.175.75 கோடி மதிப்பில் குடியிருப்பு கட்டிடப் பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. நடப்பாண்டில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story