மசினகுடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
மசினகுடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கூடலூர்
ஆட்கொல்லி புலி அச்சுறுத்தல் காரணமாக மசினகுடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஆட்கொல்லி புலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடியில் கடந்த 1-ந் தேதி மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த முதியவரை புலி அடித்து கொன்றது. அந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் வனத்துறையினருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிக்காததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது. மேலும் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொக்காபுரம், மாயார், சிங்காரா, மாவனல்லா உள்பட கிராமங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கும் விட தடை விதித்து இருக்கின்றனர். இதனால் முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
வருகை குறைந்தது
இதற்கிடையில் ஆட்கொல்லி புலி அச்சுறுத்தலால், மசினகுடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்து காணப்படுகிறது. இதனால் மசினகுடி பஜார் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன சவாரி உள்ளிட்ட தொழில்கள் முடங்கி கிடக்கிறது.
குறிப்பாக கொரோனா முழு ஊரடங்கு காலத்துக்கு பிறகு கடைகளை திறந்து வியாபாரிகள் தொழிலை நடத்தி வந்தனர். தற்போது புலி அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே புலியை விரைவாக பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இயல்பு வாழ்க்கை
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மசினகுடியில் முதியவரை புலி தாக்கி கொன்ற சம்பவத்தால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் அனைத்து வணிக செயல்பாடுகளும் முடங்கியது. வார விடுமுறை நாட்களில் கர்நாடக சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்தனர். புலியை விரைவாக பிடித்தால் மட்டுமே இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
Related Tags :
Next Story