கள்ளக்காதலிக்கு 2 போ் போட்டி: கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை மது விருந்துக்கு அழைத்து நண்பர்கள் வெறிச்செயல்


கள்ளக்காதலிக்கு 2 போ் போட்டி: கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை மது விருந்துக்கு அழைத்து நண்பர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Oct 2021 5:24 PM GMT (Updated: 10 Oct 2021 5:24 PM GMT)

கள்ளக்காதலியுடன் பழகுவதில் 2 பேர் இடையே ஏற்பட்ட போட்டியால் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மது விருந்துக்காக அழைத்து வந்து அவரது நண்பர்களே தீர்த்துக்கட்டினர்.

விருத்தாசலம், 

முன்னாள் ராணுவ வீரர் 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஆரோக்கியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ். இவரது மனைவி வெலிங்டன் மேரி. இந்த தம்பதிக்கு அருள்அரவிந்த்(வயது 25), அருண்ராஜ்(23) ஆகிய மகன்கள் இருந்தனர்.  ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏசுராஜ், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக இருந்தார். இதற்காக ஏசுராஜ் குடும்பத்துடன் விருத்தாசலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

கருத்து வேறுபாடு 

இந்த நிலையில் ஏசுராஜிக்கும், வெலிங்டன் மேரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ஏசுராஜ், தனது இளைய மகன் அருண்ராஜியுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். வெலிங்டன் மேரி தனது மூத்த மகனுடன் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். 
அருண்ராஜியும், வடலூர் ஓ.பி.ஆர். தெருவை சேர்ந்த குமார் மகன் அப்பு என்கிற பிரேம்குமார் (28), விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மனோஜ்(24), வீரபாண்டியன் தெருவை சேர்ந்த குருநாதன் மகன் கலைச்செல்வன்(26), அண்ணாநகரை சேர்ந்த ஜியாவுதீன் மகன் முகமது நபிஸ் (26) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். 

பெண்ணுடன் பழக்கம் 

இதில் அருண்ராஜியும், பிரேம்குமாரும் சென்னை மெரினா கடற்கரையில் சாவி கொத்தில் பெயர் அச்சிடும் வேலை செய்து வருகின்றனர். அப்போது அங்கு மீன் விற்கும் ஒரு பெண்ணுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனித்தனியாக அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் அந்த பெண்ணுடன் பழகுவது தொடர்பாக அருண்ராஜிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு, அது தகராறாக மாறியது. 

மது விருந்துக்கு அழைப்பு

இந்த நிலையில் மனோஜ் பிறந்த நாள் கொண்டாட இருப்பதாகவும், மது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அருண்ராஜை பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் விருத்தாசலத்துக்கு அழைத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முகமதுநபிசின் வீட்டில் மது விருந்து நடைபெற்றது. இதில் அருண்ராஜ் உள்பட 5 பேரும் கலந்து கொண்டனர். 
போதை தலைக்கு ஏறியதும் பெண்ணுடன் யார் தொடர்பு வைத்துக் கொள்வது என்ற விவகாரம் மீண்டும் வெடித்தது. அப்போது பிரேம்குமார், அருண்ராஜிடம் இளம்பெண்ணிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

கத்திக்குத்து 

இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண்ராஜியின் வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அருண்ராஜ், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், விபத்து நிகழ்ந்ததுபோல் சித்தரிக்க திட்டமிட்டனர். அதன்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருண்ராஜை அதிகாலை 2.30 மணி அளவில் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கி கொண்டு வந்து  வீட்டின் எதிரே உள்ள சாலையின் நடுவில் போட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதை பார்த்ததும் நண்பர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். 

4 நண்பர்கள் கைது 

ஆம்புலன்சில் வந்த ஊழியர், அருண்ராஜை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகி்ச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட போட்டியால் நண்பர் பிரேம்குமார் என்பவர் அருண்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை நடந்த முகமது நபிசி்ன் வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார்,  மனோஜ், கலைச்செல்வன், முகமது நபிஸ்(26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மது விருந்துக்காக அழைத்து வாலிபரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாலிபர் கொலை நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார். 

Next Story