வாக்கு எண்ணும் மையத்துக்குள் தி.மு.க. எம்.எல்.ஏ. சென்றதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


வாக்கு எண்ணும் மையத்துக்குள் தி.மு.க. எம்.எல்.ஏ. சென்றதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:17 PM IST (Updated: 10 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் தி.மு.க. எம்எல்ஏ சென்றதால், அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி

ஆலங்காயத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் தி.மு.க. எம்எல்ஏ சென்றதால், அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ. சென்றார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் 27, கிராம வார்டு உறுப்பினர்கள் 237, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18, மாவட்ட குழு உறுப்பினர்கள் 2 ஆகிய பதவிகளுக்கு 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின்போது பதிவான வாக்கு பெட்டிகள் ஆலங்காயத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மூன்றடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான க‌.தேவராஜ் காரில் நேற்று காலை 11 மணிக்கு வந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

மேலும் அவரை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் அனுமதித்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் உள்ளே வந்தபோது வாக்குப்பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு உள்ளதாகவும் அதனுடைய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதாக சுட்டிகாட்டி அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினர் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உள்ளே சென்ற அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டன அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் சாலைமறியல்

இதுகுறித்து தகவல் அறிந்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார் ஆகியோர் வந்தனர். அவர்களை அதிகாரிகள் உள்ளே சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட வைத்தனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சென்ற தேவராஜ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய கோரியும், அவரை அனுமதித்த அதிகாரிகளை கண்டித்தும் அ.தி.மு.க.வினர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார் ஆகியோர் வெளியில் வந்து அங்கு கூடி இருந்தவர்களிடம் சட்டப்படி, சட்டத்தை மீறி உள்ளே வந்த ஆளுங்கட்சி எம்.எல்,ஏ, மீது வழக்குப்பதிவு செய்வதாக அதிகாரிகள் கூறி இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாகவும் கூறினர். 

மேலும் கொத்தகோட்டை, மதனாஞ்சேரி பகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அங்கு தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர் எனவே தற்போது கலைந்து செல்லும்படி பொதுமக்களிடம்  கேட்டுக்கொண்டனர்.
 அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறுகையில், ஆலங்காயத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் எம்.எல்.ஏ. சென்றதாக தகவல் கிடைத்தது. 

விதிகளை மீறி சென்றவர்கள்  யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எம்.எல்.ஏ.வை அனுப்பி வைத்த போலீசாரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மற்றபடி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story