வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த பெண்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:
ரூ.1 லட்சத்து 15 ஆயிரம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அடுத்து மீமிசல் அருகே உள்ள எஸ்.பி. மடத்தை சேர்ந்தவர் சித்திக் அலி மகன் முகமது ஆசிக் (வயது 24). இவருடைய நண்பரான கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ராசுதீன் (24) என்பவர் கோட்டைப்பட்டினத்தில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
இவர், முகமது ஆசிக்கிடம் தனக்கு தெரிந்த டிராவல்ஸ் மூலம் மொரிசியஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி முன் பணமாக ரூ.15 ஆயிரத்தை அவரது உறவினரும், டிராவல்ஸ் பங்குதாரருமான கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த காதர் மகன் அம்ஜத் கான் (36) என்பவருடன் சேர்ந்து பெற்றுள்ளார். பின்னர் மீதி தொகையான ரூ.1 லட்சத்தை அம்ஜத் கான் மனைவி நசீமா பர்வீன் (30) அம்ஜத் கான் தாயார் அய்னுல் மர்ஜான் (55) ஆகியோரின் வங்கி கணக்கிற்கு பணத்தை பிரித்து அனுப்பி உள்ளார்.
4 பேர் மீது வழக்கு
ஆனால் முகமது ஆசிக்கிடம் பேசியபடி ராசுதீன் உள்ளிட்டவர்கள் அவரை மொரிசியஸ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப வில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமது ஆசிக், ராசுதீன் உள்ளிட்டவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், அவர்கள் திருப்பி தரவில்லை. இதுகுறித்து முகமது ஆசிக் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், முகமது ஆசிக்கை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறி ராசுதீன், அம்ஜத் கான், நசீமா பர்வீன் அய்னுல் மர்ஜான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story