வேட்பாளர் மீது தாக்குதல்; 2 கார்கள் உடைப்பு
மேல்மலையனூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வேட்பாளர் மீது தாக்கியதோடு, 2 கார்கள் அடித்து உடைக்கப்பட்டன. இது தொடர்பாக மற்றொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் கெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரகுமார் என்பவரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதனால் இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேட்பாளர் ராஜாவிடம் சென்று எங்கள் வீட்டில் பிரச்சினையாக உள்ளது. அதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராஜா அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்கள் அன்பரசு, ஜானகிராமன், நடராஜன் ஆகியோருடன் 2 கார்களில் சென்றுள்ளார்.
கார்கள் உடைப்பு
கார்கள் அங்குள்ள தேரடியில் நின்றபோது ஹரிஹரகுமாரின் ஆதரவாளரான பாலகுரு என்பவர் ராஜாவை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். தொடர்ந்து ஹரிஹரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விக்னேஷ், அஜீத்குமார், ராஜேந்திரன், ரமேஷ், முருகேசன், சிலம்பரசன், சண்முகம், பெருமாள் ஆகியோர் சேர்ந்து கொண்டு ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் ராஜாவின் கார் மற்றும் மொபட்டை அடித்து நொறுக்கி உள்னர். இதுகுறித்து ராஜா வளத்தி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஹரிஹர குமார், பாலகுரு, விக்னேஷ், அஜீத்குமார், ராஜேந்திரன், ரமேஷ், முருகேசன், சிலம்பரசன், சண்முகம், பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், சிலம்பரசன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story