குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்


குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2021 1:45 AM IST (Updated: 11 Oct 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

திருச்சி 
திருச்சி மாநகராட்சிக்கு ரூ.3 கோடியே 93 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள சாலையை சுத்தம் செய்யும் 2 நவீன வாகனங்கள், திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்கள் ஆகியவற்றினை மாநகர தூய்மைப்பணிக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தென்னூர் அண்ணாநகர் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே நேற்று நடைபெற்றது. 
இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, மாநகர பகுதிகளில் சுத்தம் செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைவில் தொடக்கம் 
திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சாலைகளில் சேகரமாகும் மண் துகள்களை அகற்றி சுத்தம் செய்யும் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒரு மணி நேரத்துக்கு 16 ஆயிரம் சதுரமீட்டர் சுத்தம் செய்யும் திறன் கொண்டது. 
உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அ.தி.மு.க. கூறுவதை ஏற்க இயலாது. அவர்கள் தேர்தலை எப்படி நடத்தினார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?. தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்றுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறி இருக்கிறது. இதை நகர்ப்புறத்துக்கு ஒதுக்கும்போது, மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநில அரசிடமும் அவ்வளவு நிதி இருக்காது. ஏற்கனவே, தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஜல்ஜீவன் திட்டம் 
 இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகள் கூடுதலாக உள்ளது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 48.3 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். 2021-ம் ஆண்டில் 50 முதல் 55 சதவீதமாகவும், இன்னும் 10 ஆண்டுகளில் நகர்ப்புறத்தில் வாழ்வோர் 60 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
ஆனால், மத்திய அரசோ கிராமப்புற மேம்பாட்டு பணிகளுக்காக மட்டுமே நிதி ஒதுக்குவதாக கூறுகிறார்கள். இதுகுறித்து ஜல்ஜீவன் திட்ட மத்திய மந்திரியை சந்தித்து முறையிட்டோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதி உள்ளார். ஜல்ஜீவன் திட்டத்தில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்தோம். இதனையடுத்து திருச்சி கம்பரசம்பேட்டை, நொச்சியம் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட மத்திய அரசுக்கு திட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தில் மானியத்தை கூடுதலாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story