பலத்த காற்றால் திருச்சி வந்த விமானம் மீண்டும் சென்னை சென்றது


பலத்த காற்றால் திருச்சி வந்த விமானம் மீண்டும் சென்னை சென்றது
x
தினத்தந்தி 11 Oct 2021 2:06 AM IST (Updated: 11 Oct 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வந்த விமானம் பலத்த காற்று, மழையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சென்றது.

செம்பட்டு
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக நகா்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் காத்திருந்தனர்.
தரையிறங்கவில்லை
அப்போது விமான நிலைய பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு 9.15 மணி அளவில் வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னை நோக்கி சென்றது. இதனால் அந்த விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்வதற்காக காத்திருந்த அமைச்சர்கள் மற்றும் 33 பயணிகள் திரும்பி சென்றனர். மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு சுமார் 12.45 மணி அளவில் திருச்சி வந்து இங்கிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று கூறப்பட்டது.


Next Story